இப்படி ஒரு புருஷனா? ICU-வில் பிறந்த ஆண் குழந்தை! 8 நாட்கள் கோமாவில் இருந்த மனைவி... கண் திறந்து குழந்தையை பார்க்காமலே பிரிந்த உயிர்! மனைவியின் சடலத்தை சாலையோரம் வீசிய கொடூர கணவன்..!!!
கர்நாடகாவில் குடும்பத் தகராறில் கணவர் தாக்கியதால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்தார். சிகிச்சையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், கணவர் தலைமறைவானார்.
கர்நாடக மாநிலம் தாவணகெரே அருகே குடும்பத் தகராறில் கணவர் தாக்கியதால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்தார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையை ஒருமுறைகூட பார்க்க முடியாமல் 25 வயதான பசம்மா உயிரிழந்தார். அவரது கணவர் நிங்கராஜ் இரண்டு குழந்தைகளுடன் தலைமறைவான நிலையில், காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
குடும்பத் தகராறில் கர்ப்பிணி மீது தாக்குதல்
தாவணகெரே தாலுகா பெதுரு கிராமத்தைச் சேர்ந்தவர் பசம்மா. மாற்றுச் சாதியைச் சேர்ந்த நிங்கராஜை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஏற்கெனவே 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது பசம்மா இரண்டாவது முறையாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த நிங்கராஜ், பசம்மாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு தாவணகெரே மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.
கோமா நிலையில் குழந்தை பிறந்த சோகம்
பசம்மாவின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக ஹப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தையைப் பிரசவிக்கச் செய்தனர். சுமார் 8 நாட்கள் சுயநினைவின்றி இருந்த பசம்மாவுக்கு மீண்டும் நினைவு திரும்பவில்லை. தான் பெற்றெடுத்த பச்சிளங்குழந்தையை பார்க்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சடலத்தை சாலையோரம் வீசி கணவர் தலைமறைவு
பசம்மா உயிரிழந்த பிறகு, அவரது உடலை தாவணகெரே கிராமப்புற காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் விட்டுவிட்டு நிங்கராஜ் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பசம்மாவின் குடும்பத்தினர், அவரது உடலை கணவர் வீட்டின் முன்பு வைத்து நிங்கராஜ் திரும்பி வருவார் என இரண்டு நாட்கள் காத்திருந்தனர். அவர் வராத நிலையில், தாவணகெரே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பசம்மாவின் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. தலைமறைவாக உள்ள நிங்கராஜையும், காணாமல் போன இரண்டு குழந்தைகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.