நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்! பிரதமர் மோடி அறிவிப்பு!
PM modi announced 2 lakhs fund for landslide affected people

கேரள மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் பகுதியில் தொடர் கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து, தெருக்களில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலை, ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி என்கிற பகுதியில் அமைந்துள்ள தேயிலை எஸ்ட்டேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள் மண்ணில் சரிந்தன.
அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு இருந்த குடியிருப்புகளில் சுமார் 85 பேர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துள்ளதாக உள்ளூர் மக்கள் கடும் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 16 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், துக்கமான இந்த நேரத்தில் என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய என்.டி.ஆர்.எஃப் மற்றும் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு வருகின்றன என பதிவிட்டுள்ளார். மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.