என்னதான் நடக்குது... அலமாறி துணிகள், படுக்கைகள், சமையலறைப் பொருட்களில் தானாகவே தீப்பற்றி எரியும் மர்மம்! மாய மந்திரம் செய்தும் பலனில்லை... தொடர்ந்து அரங்கேறும் விபரீதத்தால் நடுநடுங்கும் கிராம மக்கள்!!!
மத்திய பிரதேசத்தின் குவாலியர் அருகே உள்ள ஆந்தரி கிராமத்தில் ஐந்து சகோதரர்களின் வீடுகளில் பொருட்கள் மர்மமாக தீப்பற்றி எரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் அருகிலுள்ள ஆந்தரி கிராமத்தில், ஐந்து சகோதரர்களின் வீடுகளில் பொருட்கள் திடீரென தீப்பற்றி எரியும் மர்ம நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்தக் குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், குவாலியர் மாவட்டம் முழுவதும் இந்தச் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
ஐந்து சகோதரர்களின் வீடுகளில் தொடரும் மர்ம தீ
குவாலியரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆந்தரி கிராமத்தைச் சேர்ந்த கல்யாண் சிங் பாகேல், சேவாராம் பாகேல், காம்தா பிரசாத் பாகேல், மகேந்திர பாகேல் மற்றும் லச்சிராம் பாகேல் ஆகிய ஐந்து சகோதரர்களின் வீடுகளில்தான் இந்த விசித்திரமான சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக அலமாரியில் இருந்த துணிகள், படுக்கைகள், சமையலறையில் இருந்த உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல் புகைந்து தீப்பற்றி எரிவதாக கூறப்படுகிறது.
மின்கசிவு அல்லது சமையல் அடுப்பின் காரணமாக தீ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், பாதுகாப்புக்காக சில பொருட்களை அண்டை வீட்டில் வைத்தபோதும் அவற்றிலும் தீப்பற்றியதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் குடும்பத்தினர் திறந்த வெளியில் இரவுகளை கழித்து வருகின்றனர்.
பரிகாரங்கள் பலனளிக்காததால் கிராமத்தில் பதற்றம்
தொடர்ந்து நிகழ்ந்த தீப்பற்றும் சம்பவங்கள் காரணமாக, கிராம மக்கள் முதலில் அமானுஷ்ய காரணங்கள் இருக்கலாம் எனக் கருதி பல்வேறு பூஜைகள் மற்றும் பரிகாரங்களை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த மாற்றமும் ஏற்படாததால், கிராமத்தில் அச்சமும் குழப்பமும் நிலவுகிறது.
அறிவியல் ரீதியில் விசாரணை தொடக்கம்
தகவலறிந்த அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனமும் தண்ணீர் டேங்கரும் கிராமத்தில் நிறுத்தியுள்ளனர். மேலும், வீடுகளில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தடயவியல் விசாரணையில், பூமிக்கடியில் இருந்து வெளியாகும் எரிவாயு, மறைமுக மின்கசிவு அல்லது ஏதேனும் ரசாயன மாற்றம் காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. தடயவியல் நிபுணர்கள் எரிந்த துணிகள், மண் மற்றும் காற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். இந்த மர்மத்திற்கு பின்னால் உள்ள உண்மையை கண்டறிய அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING: சிவகங்கை எம். பி கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! பெரும் பரபரப்பு..!!