வாரத்தின் 3 நாள் மட்டும் டீச்சர் வேலை! மற்ற நாட்களில் செய்த தில்லாலங்கடி வேலை... QR கோடு மூலம் பெற்ற பணம்! ஆடம்பர கார் வாங்கியதும் போலீஸ்சிடம் சிக்கிய தோழிகள்..!!!
கேரளாவில் ஆபரேஷன் தூஃபான் சோதனையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக பள்ளி ஆசிரியைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கியூஆர் கோடு மூலம் பணம் பெற்று போதைப்பொருள் விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது.
கேரளாவில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஆபரேஷன் தூஃபான் சோதனையில் கைதான ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியைகள் இருவர் போதைப்பொருள் விற்பனை வலையுடன் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
விசாரணையில் அம்பலமான பின்னணி
கேரள மாநிலத்தில் போதைப்பொருள் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் தூஃபான்' சோதனையில் ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சர்வசிக்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றி வந்த காவ்யா மற்றும் அவரது தோழி கீர்த்தனா ஆகிய இரு ஆசிரியைகளின் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
QR கோடு மூலம் பணம்... லொகேஷன் மூலம் போதைப்பொருள்
விசாரணையில், வாடிக்கையாளர்களிடம் QR Code மூலம் பணம் பெற்றுக்கொண்டு, போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்ட இடத்தின் லொகேஷனை அனுப்பி விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த முறையைப் பயன்படுத்தி நீண்ட காலமாக சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆடம்பர கார் வாங்கியதும் கண்டுபிடிப்பு
போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணம் காவ்யாவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த தொகையில் விலையுயர்ந்த ஆடம்பர கார் ஒன்றையும் அவர் வாங்கியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ஆசிரியர் பணி இருந்ததால், அந்த வேலையை ஒரு போர்வையாக பயன்படுத்தி இந்தச் செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் காவலில் எடுத்து மேலும் விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.