இன்ஸ்டாவால் பிளஸ்-2 மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! 17 வயது சிறுமி காட்டுக்குள் வரவழைத்து... ஒன்று கூடி கூட்டாளிகள் செய்த அதிர்ச்சி! துப்பு துலக்கிய போலீஸ்..!!!
கேரளாவில் நண்பரைப் பார்க்கச் சென்ற 17 வயது பிளஸ்-2 மாணவர் அபிராம் சடலமாக மீட்கப்பட்டார். இன்ஸ்டாகிராம் நட்பு தொடர்பான மோதலில் கொலை நடந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், நண்பரைப் பார்க்கச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற 17 வயது பிளஸ்-2 மாணவர் அபிராம் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பாங்கப்பாறை பகுதியில் உள்ள புதரில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் நட்பு தொடர்பான முன்விரோதமே கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செல்போன் சிக்னல் மூலம் மாணவரின் உடல் மீட்பு
திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியைச் சேர்ந்த அபிராமுக்கு, சம்பவத்தன்று தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து நண்பரைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட அவர், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்ததால் பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: ரத்தக்கறையுடன் சாலையோரம் சிதறிக்கிடந்த இதயம், கல்லீரல்...! நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்...!!!
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் மாணவரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாங்கப்பாறை பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது. அங்குள்ள அடர்ந்த புதரில் சாக்குப்பைக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அபிராமின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இன்ஸ்டாகிராம் நட்பால் ஏற்பட்ட முன்விரோதம்
போலீசாரின் விசாரணையின்படி, அபிராம் இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுமியுடன் நட்பாகப் பழகி வந்துள்ளார். அந்தச் சிறுமியை வேறொரு இளைஞர் காதலித்து வந்துள்ளார். அபிராமுடனான சிறுமியின் பழக்கம் அந்த இளைஞருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, சிறுமியின் உதவியுடன் அபிராமை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளனர். அங்கு ஏற்பட்ட தகராறில் அந்த இளைஞரும் அவரது கூட்டாளியும் சேர்ந்து மாணவரைத் தாக்கியுள்ளனர். பின்னர் கழுத்தை மிதித்துக் கொலை செய்து, உடலைச் சாக்குப்பையில் கட்டி புதரில் வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
17 வயது சிறுமி உட்பட 3 பேர் கைது
இந்தக் கொலை தொடர்பாக 17 வயது சிறுமி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். இருப்பினும், கொலைக்கான முழுப் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், குற்றவாளிகள் அபிராமின் நண்பரை குறிவைத்துத் திட்டமிட்டபோது, தவறுதலாக அபிராம் சிக்கினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதையும் கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.