அரசு வேலைக்காக பெற்ற தாயையே துடிதுடிக்க கொன்ற மகள்....! மாமா கூட சேர்ந்து போட்ட திட்டம்... விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கருணை அடிப்படையிலான அரசு வேலை மற்றும் குடும்ப சொத்துக்காக தாயைக் கூலிப்படை மூலம் கொலை செய்ததாக மகள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில், கருணை அடிப்படையிலான அரசு வேலை மற்றும் குடும்ப சொத்தை கைப்பற்றும் நோக்கில் 23 வயது இளம்பெண் தனது சொந்த தாயையே கூலிப்படை மூலம் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முதலில் சாலை விபத்தாகக் கருதப்பட்ட மரணம், பின்னர் திட்டமிட்ட படுகொலை என தெரியவந்துள்ளது.
விபத்து என நினைத்த வழக்கில் திருப்பம்
ஜெய்ப்பூரின் பிரதாப் நகரைச் சேர்ந்த நீரஜ் சர்மா (45), கடந்த ஜூலை 3-ஆம் தேதி அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதி உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது சாதாரண சாலை விபத்தாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவரது சகோதரர் ராகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கினர். இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் தகவல்களை ஆய்வு செய்தபோது, இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பது உறுதியானது.
அரசு வேலை மற்றும் சொத்துக்காக தீட்டிய சதி
போலீஸ் தகவலின்படி, நீரஜ் சர்மாவின் கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு நீதிமன்றத்தில் இளநிலை எழுத்தராக கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது. இந்த வேலை மற்றும் குடும்ப சொத்தை கைப்பற்றும் நோக்கில், அவரது மகள் ஆயுஷி தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனது மாமா மற்றும் சில உறவினர்களுடன் இணைந்து கொலை சதித்திட்டத்தை தீட்டி, கூலிப்படையை வைத்து விபத்து போல அரங்கேற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
7 பேர் கைது; மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆயுஷி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு வேலை மற்றும் சொத்துக்காக பெற்ற தாயையே கொலை செய்ய சதி செய்ததாக வெளியான இந்த வழக்கு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 15 ஆண்டு கால வாழ்க்கை... பணத்துக்காக மனைவி போட்ட பலே திட்டம்! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த காதலன்... வசமாகச் சிக்கிய கொடூர ஜோடி..!!!