IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.. 8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.!
ஆந்திராவில் IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
ஐஏஎஸ் அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலம் குண்டூர், தாடே பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சின்ன ராமுடு. இவர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவரது மகள் மாதுரி (வயது 27). கடந்த மார்ச் மாதத்தில் நந்தியால் மாவட்டத்தில் உள்ள புக்கனபள்ளி பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் நாயுடு என்பவரை மாதுரி காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம்:
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இரு விட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திருமணம் ஆன சில மாதங்களுக்கு பின்னர் வீட்டில் வரதட்சணை வாங்கி வரும்படி கணவர் ராஜேஷ் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
வரதட்சணை கொடுமை:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த சின்ன ராமுடு தனது மகளை இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். திருமண வாழ்க்கை வரதட்சணையால் தடம் மாறியதாக எண்ணிய மாதுரி சமீப காலமாகவே மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இரவு நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐஏஎஸ் அதிகாரி மகள் தற்கொலை:
மறுநாள் காலையில் மகள் தனது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மகள் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து வரதட்சணை கொடுமை செய்ததாக ராஜேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.