வீட்டுக்கு வர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மனைவியின் மூக்கைக் கடித்துக் குதறிய கணவன்!
வீட்டுக்கு வர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மனைவியின் மூக்கைக் கடித்துக் குதறிய கணவன்!
தெலுங்கானாவில் குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்த மனைவியை, மீண்டும் தன்னுடன் வருமாறு அழைத்துச் செல்ல வந்த கணவன், ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவியின் மூக்கைக் கடித்துக் காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கோட்டப்பள்ளியைச் சேர்ந்த மம்தாவுக்கும், மல்லம்பேட்டையைச் சேர்ந்த மணிச்சந்தருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மம்தா, மணிச்சந்தரைப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மணிச்சந்தர், மம்தாவை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: கணவனா? தோழியா? 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!
அப்போது மம்தா அவருடன் செல்ல மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மணிச்சந்தர், மம்தாவின் தந்தை நாராயணனை மரக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
தந்தை தாக்கப்படுவதைப் பார்த்து மம்தா, அவரை காப்பாற்றுவதற்காக ஓடிச் சென்றுள்ளார். அப்போது மணிச்சந்தர், மம்தாவையும் தாக்கியதுடன், அவரது மூக்கை கடித்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மம்தாவின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டிய நிலையில் மம்தா மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மம்தா மற்றும் அவரது தந்தை நாராயணன் ஆகிய இருவரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு தொடர்பாக நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கணவனை கொன்றுவிட்டு ரத்தத்தை நெற்றியில் திலகமிட்ட மனைவி.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!