என்னை எப்போ வேணாலும் என் புருஷன் கொன்னுடுவார் போல... வீடியோ காலில் பெற்றோரிடம் கதறிய சில மணி நேரங்களில் நடந்த பயங்கரம்...!!!
ஆந்திர மாநிலம் குண்டூரில் மனைவியின் மீது சந்தேகமடைந்த கணவர் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கு முன் பாதிக்கப்பட்ட பெண் பெற்றோரிடம் அச்சத்தை வெளிப்படுத்திய தகவலும் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம், ஒரு குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய கொடூரக் கொலையாக முடிந்துள்ளது. பலமுறை குடும்பத் தகராறுகள் ஏற்பட்ட நிலையில், ஜூலை 14-ஆம் தேதி இரவு நடந்த தாக்குதலில் சந்தியா ராணி உயிரிழந்தார். சம்பவத்துக்குப் பிறகு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குடிப்பழக்கம் உருவான குடும்பப் பிரச்னை
குண்டூர் மாவட்டம் தெனாலி அருகே உள்ள அங்கலக்குடுருவைச் சேர்ந்த அடகுக் கடை உரிமையாளர் நரேந்திர பாபுவுக்கும், பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா ராணிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில் சுமூகமாக இருந்த குடும்ப வாழ்க்கை, நரேந்திர பாபுவின் குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி தகராறுகளால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குடும்பச் செலவுகளுக்குப் பணம் வழங்காமல், மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்தால் அரங்கேறிய கொலை
இதனால் சில நாட்களுக்கு முன்பு சந்தியா ராணி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர் பெரியவர்கள் முன்னிலையில் இனி தகராறு செய்ய மாட்டேன் என்று உறுதியளித்த நரேந்திர பாபு, மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால், சந்தியா ராணி செல்போனில் நீண்ட நேரம் பேசியதைத் தொடர்ந்து அவர் மீது சந்தேகம் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, முன்கூட்டியே வாங்கி வைத்திருந்த கத்தியால் ஜூலை 14-ஆம் தேதி இரவு அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் நரேந்திர பாபு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கொலைக்கு முன் பெற்றோரிடம் வெளிப்படுத்திய அச்சம்
விசாரணையில், கொலை நடந்த அதே நாள் காலை சந்தியா ராணி தனது பெற்றோருக்கு வீடியோ அழைப்பு செய்து, கணவரின் நடத்தை குறித்து அச்சம் தெரிவித்திருந்தது தெரியவந்துள்ளது. “என்னை எப்போது வேண்டுமானாலும் கொலை செய்துவிடுவார்” என்று பயத்துடன் கூறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அச்சம் சில மணி நேரங்களிலேயே உண்மையாக மாறியிருப்பது குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாமியார் உயிருடன் இருக்கும் வரை.... அந்த விஷயம் நடக்காது! மனைவிக்காக காத்திருந்த கணவனின் வெறிச்செயல்! பழனி அருகே நடந்த பகீர் சம்பவம்!!!