ஐயோ.... பூஜைக்கு பூ பறிக்கப் போன 11 வயது சிறுவன்! 23வது மாடி பால்கேனில் கேட்ட அலறல் சத்தம்... மகனைக் காப்பாற்ற போன தந்தைக்கும் நேர்ந்த விபரீதம்! நொடியில் நொறுங்கிய குடும்பம்... பகீர் சம்பவம்...!!!
கிரேட்டர் நொய்டாவில் 23-வது மாடி பால்கனியில் பூப்பறிக்க முயன்ற 11 வயது சிறுவன் தவறி விழுந்தபோது காப்பாற்றச் சென்ற தந்தையும் கீழே விழுந்து உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 23-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தந்தையும், 11 வயது மகனும் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்குச் செல்லத் தயாரானபோது இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது. மகன் பால்கனியில் இருந்து தவறி விழும் நிலையில் இருந்ததைப் பார்த்த தந்தை, அவரைக் காப்பாற்ற முயன்றபோது இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
கோயிலுக்குச் செல்லத் தயாரான குடும்பம்
கிரேட்டர் நொய்டாவில் உள்ள மகாகூன் மைவுட்ஸ் சொசைட்டியில் இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர் ரண்தீப் பாத்ரா (40). டெல்லி மத்திய செயலகத்தில் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அவரது 11 வயது மகன் ஆரவ்வும் உயிரிழந்தார்.
ரண்தீப்பின் மனைவி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, வெள்ளிக்கிழமை காலை குடும்பத்துடன் காட்டு ஷ்யாம் கோயிலுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக அதிகாலையிலேயே எழுந்த ரண்தீப், மகன் ஆரவ்வையும் எழுப்பி பூஜைக்குத் தேவையான பூக்களைப் பறித்து வருமாறு கூறியுள்ளார். தந்தையும் மகனும் பால்கனியில் இருந்த செடிகளில் பூப்பறிக்கச் சென்றனர். மனைவி சமையலறையில் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.
மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை
அப்போது பால்கனியில் இருந்து ஆரவ் அலறும் சத்தம் கேட்டுள்ளது. ஏணியில் ஏறி பூப்பறிக்க முயன்றபோது, தரையில் இருந்த ஈரப்பதம் காரணமாக சிறுவன் நிலைதடுமாறி பால்கனி கம்பியின் வெளியே தொங்கியதாகக் கூறப்படுகிறது.
மகன் ஆபத்தில் இருப்பதைப் பார்த்த ரண்தீப், உடனடியாக அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆரவ்வை மேலே இழுக்க முயன்றபோது அவரது கால்களும் நழுவியதால், தந்தையும் மகனும் 23-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனில்லை
இதையடுத்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிஸ்ரக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.