இரவு 10 மணிக்கு குளிக்க சென்ற பார்வையற்ற 18 வயது மாணவர்! மறுநாள் காலை 10 மணிக்கு தூய்மை பணியாளர் கண்ட அதிர்ச்சி! சிசிடிவியில் சிக்கிய கடைசி நிமிடங்கள்..!!!
உத்தரப் பிரதேசம் கோரக்பூரில் பார்வையற்றோர் அரசுப் பள்ளி விடுதி குளியலறையில் 18 வயது மாணவர் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளி விடுதி குளியலறையில் 18 வயது மாணவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை இரவு குளியலறைக்குச் சென்ற அவர், அதன்பின் அறைக்குத் திரும்பவில்லை. புதன்கிழமை காலை தூய்மைப் பணியாளர் பார்த்தபோதுதான் மாணவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு குளியலறைக்குச் சென்ற மாணவர்
கோரகூர் லால்டிக்சி பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஸ்பர்ஷ்’ அரசினர் பார்வையற்றோர் சிறுவர் மேல்நிலைப் பள்ளியில் அன்ப் குமார் 2019-ம் ஆண்டு முதல் விடுதியில் தங்கி படித்து வந்தார். இரு கண்களிலும் பார்வையற்ற அவர், தற்போது 8-ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வாலியுடன் குளியலறைக்குச் சென்ற அன்ப் குமார், நீண்ட நேரமாகியும் அறைக்குத் திரும்பவில்லை. புதன்கிழமை காலை 10 மணியளவில் குளியலறையைச் சுத்தம் செய்யச் சென்ற தூய்மைப் பணியாளர், அங்கு மாணவர் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்
தகவல் கிடைத்ததும் நகா போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர். பள்ளி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அன்ப் குமார் கையில் வாலியுடனும் கழுத்தில் துண்டுடனும் தனியாக குளியலறையை நோக்கிச் செல்வது பதிவாகியுள்ளது. அதன்பிறகு அவர் வெளியே வரும் காட்சி எதுவும் பதிவாகவில்லை.
மாணவரின் செல்போனை கைப்பற்றியுள்ள போலீசார், அதில் உள்ள அழைப்புப் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து வருகின்றனர். சக மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அன்ப் குமார் சமீபகாலமாக யாருடனாவது பிரச்சினையில் இருந்தாரா அல்லது மன அழுத்தத்தில் இருந்தாரா என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
உடற்கூராய்வு முடிவுக்காக காத்திருப்பு
முதற்கட்ட விசாரணையில் மாணவரின் மரணம் தற்கொலை கோணத்திலும் பார்க்கப்படுகிறது. எனினும், இறப்புக்கான காரணத்தை உறுதி செய்ய மருத்துவர்கள் குழு மூலம் உடற்கூராய்வு நடைபெற்று வருகிறது. இதன் முடிவு கிடைத்த பிறகே மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.