திக் திக் நிமிடம்... 4 மணி நேரம் நடுவானில் நாளா பக்கமும் சுத்திய விமானம்! தரையிறங்க முடியாமல் தத்தளிப்பு.... கதறி அழுத பயணிகளின் பரிதாப காட்சி !!!
ஹைதராபாத்-ஹூப்பள்ளி Fly91 விமானம் மோசமான வானிலை காரணமாக 4 மணி நேரம் வானில் சிக்கியது. பயணிகள் பதற்றம்; பெங்களூருவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
ஹைதராபாத்தில் இருந்து ஹூப்பள்ளிக்குப் புறப்பட்ட Fly91 விமானம், மோசமான வானிலை காரணமாக வானிலேயே நான்கு மணி நேரம் சிக்கியதால் பயணிகள் பெரும் பதற்றத்தில் ஆழ்ந்தனர். திட்டமிட்ட நேரத்தில் தரையிறங்க முடியாததால், விமானம் இறுதியில் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. அனைவரும் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர்.
வானிலை காரணமாக தாமதமான தரையிறக்கம்
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலை 3 மணியளவில் புறப்பட்ட IC3401 விமானம், 4:30 மணிக்கு ஹூப்பள்ளி சென்றடைய வேண்டும். ஆனால், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக தரையிறக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால், விமானம் முண்ட்கோட், தாவணகெரே, சிவமோகா பகுதிகளுக்கு மேல் நீண்ட நேரம் வட்டமடித்தது.
பயணிகளின் பதற்றம், சமூக வலைதளங்களில் வீடியோ
வானில் நீண்ட நேரம் சுற்றியதால், உள்ளிருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், சிலர் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்வதும், சிலர் கூச்சலிட்டு விமானத்தை மாற்றுப் பாதைக்கு திருப்புமாறு கோருவதும் பதிவாகியுள்ளது. அந்த தருணம் பலருக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: திருச்சியில் வானிலேயே வட்டமடிக்கும் விமானம்.. சக்கரத்தில் கோளாறால் அதிர்ச்சி.. பயணிகள் நிலை என்ன?
பெங்களூருவில் பாதுகாப்பான தரையிறக்கம்
சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, மாலை 7:30 மணியளவில் விமானம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. தொழில்நுட்ப கோளாறு என்ற தகவல்கள் வெளியான நிலையில், Fly91 நிறுவனம் அதை மறுத்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைப்படி வானில் சுற்றுவது அல்லது மாற்று விமான நிலையத்துக்கு மாற்றுவது வழக்கமானது என்றும், பயணிகளின் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் செய்யப்படவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.