பெரிய அளவிலான நிலநடக்கங்கள் இந்தியாவில் ஏற்படாதது குறித்து... நிபுணர்கள் கருத்து...!
பெரிய அளவிலான நிலநடக்கங்கள் இந்தியாவில் ஏற்படாதது குறித்து... நிபுணர்கள் கருத்து...!
பயங்கர நிலநடுக்கங்கள் இந்தியாவில் தடுக்கப்படுவது எப்படி என்பது தொடர்பாக நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை துருக்கியிலும், சிரியாவிலும் பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடுக்குமாடி கட்டிடங்கள் எல்லாம் சரிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இது மாதிரியான பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் இந்தியாவில் தடுக்கப்படுகின்றன. சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் தான் இது மாதிரியான பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாமல் தடுக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து நிபுணர்கள் கூறும்போது, சிறிய அளவிலான நில அதிர்வுகள், புவித்தட்டுகளின் அழுத்தத்தை விடுவிக்க உதவுகின்றன. பேரழிவிலிருந்து இந்த மாதிரியான சிறிய நில அதிர்வுகள் இந்தியாவைக் காக்க உதவுகின்றன.
இந்தியா பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் சமாளிக்க தயாராக உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையின் அர்ப்பணிப்பும், அதன் வீரர்கள் பெற்றுள்ள பயிற்சியும் மிகவும் சிறப்பானவை, என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் நில நடுக்கங்கள் பெரிய அளவில் நேராமல் தடுப்பது குறித்து புவி அறிவியல்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் ஓ.பி.மிஷ்ரா கூறுகையில்;-
பாகிஸ்தானின் எல்லை அருகே இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள முச்சந்திப்பு, சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் காரணமாக தொடர்ந்து அழுத்தத்தை வெளியிடுகிறது. அவற்றில் சில நில நடுக்கங்கள் 4 மற்றும் 5 ரிக்டர் அளவிலானவை என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, இந்த முச்சந்திப்பு மிகவும் இறுக்கமானது, கச்சிதமானது, அது அதிக அழுத்தத்தைத் தாங்கக்கூடியது. இந்த அழுத்தம் உடையும் போது, அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.
துருக்கியில் இப்படி 2 முச்சந்திப்புகள் உள்ளனவாம். அவற்றில் ஒன்றான அரேபியன் தட்டு, அனடோலியன் தட்டு, ஆப்பிரிக்கன் தட்டு சந்திக்கும் முச்சந்திப்பு உடைந்ததால்தான் துருக்கி, சிரியா பேரிழப்புகளுக்கு ஆளாகி உள்ளன என்று கூறுகின்றனர்.
மேலும் அங்கு சிறிய அளவிலான நில நடுக்கங்கள் ஏற்படாததால், நிறைய அழுத்தம் குவிந்ததனால் தான் துருக்கி சக்திவாய்ந்த பல நிலநடுக்கங்களை சந்தித்தது என்றும் நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்தார்.