போலீஸ்கு போன் போட்டு மதுபோதையில் கணவன் இறந்ததாக கூறிய மனைவி! விசாரணயில் வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!!
உத்தரப் பிரதேசத்தின் புலந்தஷாரில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை மனைவியே கழுத்தை நெரித்துக் கொன்றது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாரில் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவனை, மனைவியே கழுத்தை நெரித்துக் கொன்றதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கணவர் அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்ததாக முதலில் மனைவி போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் விசாரணையில் நடந்தது வேறு என்பது தெரியவந்தது.
மது போதையால் இறந்ததாக கூறிய மனைவி
பஹ்லிம்புரா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண குமார் (36) என்பவர் வீட்டில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து அவரது மனைவி ப்ரீத்தி குமாரி (35), அவசர உதவி எண்ணான 112-க்கு தொடர்பு கொண்டு, கணவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றினர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ண குமாரின் மரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
காவல்துறையினரின் தீவிர விசாரணையில், கிருஷ்ண குமார் மதுபோதையால் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்தது. கணவர் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்த நிலையில், போலீசார் ப்ரீத்தி குமாரியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, கணவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து தன்னிடம் தகராறில் ஈடுபட்டு, தாக்கி வந்ததாக அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கணவரின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
மனைவி கைது;
வாக்குமூலம் மற்றும் விசாரணையின் அடிப்படையில் ப்ரீத்தி குமாரியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, கொலை நடந்த விதம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய கூடுதல் தகவல்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.