ரூ.25 லட்சம் சம்பள வேலையை விட்டு உணவு டெலிவரி வேலைக்கு சேர்ந்த இளைஞர்.. சாதகங்களும், பாதகங்களும்.!
கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் ரூ.25 லட்சம் சம்பளம் கிடைக்கும் கார்ப்பரேட் வேலையை விட்டு உணவு டெலிவரி ஊழியராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை விட்டு, தனது கிளவுட் கிச்சன் கனவை நிறைவேற்ற உணவு டெலிவரி ஊழியராக வேலைக்கு சேர்ந்தது பேசுபொருளாகியுள்ளது.
இளம் தலைமுறையினர் வேலைப்பளு, வாழ்க்கை முறை, சம்பளம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் படித்து பெற்ற வேலையை விட்டுவிட்டு தங்களுக்கென தொழில்களை தொடங்க ஆரம்பித்துள்ளனர். தங்களுக்கு பிடித்த தொழில்களை தொடங்குவதற்காக உணவு டெலிவரி செய்வது, ராபிடோ ஓட்டுவது அல்லது ஆன்லைன் டெலிவரி செய்வது உள்ளிட்ட வேலைகளை பார்த்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து சிறு தொழில்களை தொடங்குகின்றனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
ரூ.25 லட்சம் சம்பள வேலையை விட்ட இளைஞர்:
90 நாள் சவால், 6 மாத சவால் என வீடியோ வெளியிட்டு ஒவ்வொரு நாளும் எவ்வளவு சேமிக்கிறார்கள் என்பதை தன்னை பின்தொடர்பவர்களுக்கு தெரிவிக்கின்றனர். இதனை காணும் பின்தொடர்பாளர்களும் அதையே செய்ய விரும்புகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு உணவு டெலிவரி ஊழியராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கியவருக்கு இப்படி ஒரு நிலையா?.. பிளேடோடு தைத்து அனுப்பிய அரசு மருத்துவர்கள்.. வலியால் துடித்த இளைஞர்.!
கிளவுட் கிச்சன் கனவு:
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவை சேர்ந்த இளைஞர் கார்ப்பரேட் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே இவருக்கு கிளவுட் கிச்சன் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. இதனால் மக்கள் என்னென்ன விரும்புகிறார்கள்?, எந்த விலைக்கு உணவு வாங்க தயாராக இருக்கிறார்கள்?, எந்தெந்த பகுதிகளில் அதிகம் உணவுகள் வாங்கப்படுகிறது? என்பதை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளார்.
4 மாதங்களில் லாபம்:
அதற்காக உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றியும் வருகிறார். உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றிய போது பலரும் ஏளனம் செய்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் தனது கனவை நோக்கி ஓடியவர் 4 மாதங்களுக்குள் லாபம் ஈட்டலாம் என நம்பிக்கை வைத்து வேலை செய்து வருகிறார். இது தொடர்பாக அவரது நண்பர் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் கூறும் கருத்து:
இந்த பதிவினை காணும் நெட்டிசன்கள் சிலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் கூறும் கருத்துகள் ஏற்புடையதாகவே இருக்கின்றன. அந்த வகையில் ஒருவர் கூறியதாவது, வேலையை விட்டுவிட்டு உணவு டெலிவரி செய்வதை நாம் மோட்டிவேஷனாக எடுத்துக் கொண்டாலும் ஒரு சில சமயம் நமது வாழ்க்கை, கடன், குடும்பம் உள்ளிட்டவைகளை யோசித்து வேலையை விடுவது அவசியம். நமது கனவை நிறைவேற்ற நமக்கு பணம் தேவைப்படுகிறது. அது டெலிவரி வேலைகளில் இருந்து மட்டும்தான் வரும் என்பது கிடையாது.
பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்:
நாம் பார்க்கும் வேலையை வைத்து முதலில் கடனை முடித்துவிட்டு குடும்பத்திற்கு தேவையானவற்றை செய்து கொண்டே சரி பாதி அளவு பணத்தை கனவிற்காக எடுத்து வைத்து நாம் நினைத்ததை செய்ய முடியும். எந்த ஒரு விஷயத்தையும் தொடங்கும் வரை யோசிக்க வேண்டும். தொடங்கிய பின் அது எதிர்வினை ஆற்றினாலும் அதற்கு நாமே பொறுப்பு என்று பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். நானும் ஒரு டெலிவரி ஊழியர்தான் என தெரிவித்துள்ளார்.
சவால்களுக்கு தயாரா?
மேலும் சிலர் சமீபத்தில் இளைஞர் ஒருவர் வேலையை விட்டு பின் குடும்பத்தை கவனிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட செய்தியை பகிர்ந்து வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்கும்போது அனைத்து வகையான சவால்களையும் யோசித்து செயல்படுவது நல்லது. இளைஞருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளனர்.