குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஆப்பிள்.. பரிதவித்த பெற்றோர்.. இறுதியில் இன்ப அதிர்ச்சி.!
Tiruppur News Today: திருப்பூரில் 9 மாத குழந்தையின் தொண்டையில் ஆப்பிள் துண்டு சிக்கிக்கொண்டது. பச்சிளம் குழந்தை வீட்டில் இருந்தால் பெற்றோர் கவனமுடன் இருக்கவும்.
9 மாத கைகுழந்தையின் தொண்டையில் ஆப்பிள் சிக்கிக்கொண்ட நிலையில், அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக குழந்தை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தது.
தொண்டையில் சிக்கிய ஆப்பிள்:
Tiruppur Baby Apple News: திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த மடத்துக்குளம், காரத்தொழுவு பகுதியில் 9 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் ஆப்பிள் துண்டு சிக்கி இருக்கிறது. காரத்தொழுவு பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் செல்வக்குமார். இவரின் மனைவி ரம்யா. தம்பதியரின் இளைய மகன் இன்பத்தமிழன் (9 மாத கைக்குழந்தை).
இதையும் படிங்க: 'என் பிள்ளை போயிடுச்சு பா' - வாய்க்காலில் அடித்துச்செல்லப்பட்ட ஒன்றரை வயது குழந்தை.. உடல் நடுங்கி கதறியழுத தாய்.!
மூச்சுவிட இயலாமல் திணறல்:
சம்பவத்தன்று ரம்யா மூத்த மகன் பரிதி தமிழை பள்ளிக்கு அனுப்பத் தயார்படுத்திக் கொண்டிருந்தபோது, ரம்யா ஆப்பிளை துண்டுகளாக வெட்டியிருந்தார். அப்போது அருகில் இருந்த 9 மாத குழந்தை எதிர்பாராதவிதமாக ஒரு ஆப்பிள் துண்டை எடுத்து வாயில் போட்டதாக கூறப்படுகிறது. அது தொண்டையில் சிக்கியதால் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறியது. உடனடியாக பெற்றோர் துண்டை அகற்ற முயன்றும் பலனளிக்கவில்லை.
தனியார் மருத்துவமனையில் அனுமதி:
அவசரநிலையை உணர்ந்த உறவினர் ஒருவர், குழந்தையை தூக்கிக்கொண்டு வடக்குகுளம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால் அங்கு அந்த நேரத்தில் பணியில் மருத்துவர் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. குழந்தையின் நிலை மேலும் மோசமடைந்ததால், உடனடியாக கார் மூலம் உடுமலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பெற்றோர்-உறவினர்கள் நிம்மதி:
தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் விரைந்து செயல்பட்டு, குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த ஆப்பிள் துண்டை பாதுகாப்பாக அகற்றினர். இதனால் குழந்தை உயிர் பிழைத்தது. அதே நேரத்தில், அவசரநிலையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததை எதிர்த்து, செல்வக்குமார் மற்றும் உறவினர்கள் மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அரசு மருத்துவர் தீபக்குமார், குழந்தையை கொண்டு வந்த நேரத்தில் தாம் உணவருந்தச் சென்றிருந்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மரணம்.. கோவை மருத்துவமனையில் சோகம்.!