கேரளாவில் கனமழை எதிரொலி; 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்புகிறது ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை
கேரளாவில் கனமழை எதிரொலி; 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்புகிறது ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை
இடுக்கி அணை கேரள மாநிலத்தில் பாயும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை 839 அடி உயரமுடைய குறவன் மலை, 925 அடி உயரமுள்ள குறத்தி மலை எனும் இரு மலைகளை இணைத்து வளைவு வடிவில் கட்டப்பட்ட அணையாகும்.
ஆசியாவிலிருக்கும் உயரமான வளைவு அணைகளுள் இது இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இதன் உயரம் 167.68 மீட்டர்கள். இந்த அணை 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதியுடையது.
கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் கனமழையைச் சந்தித்து வருகின்றன. வானிலை ஆய்வு மையம் இம்மழை புதன் வரை நீடிக்கும் எனக் கணித்துள்ளது.
இதனையடுத்து இடுக்கி அணையின் நீர் மட்டம் 2395 மீட்டரைத் தொட்டுள்ளது. இடுக்கி அணையின் நீர்மட்டம் 2399மீட்டரைத் தொட்டால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படும். கடைசியாக இவ்வாறு நடந்தது 1992இல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்போது அணை தனது முழுக்கொள்ளவை எட்ட இருப்பதால், அணை திறக்கப்பட உள்ளது.
இடுக்கி அணையைத் திறப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன், வருவாய்துறை அமைச்சர் இ சந்திரசேகரன், நீர்வளத்துறை அமைச்சர் மாத்யு டி தாமஸ், வருவாய் கூடுதல் செயலாளர் பி.எச். குரியன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்கள்.
இடுக்கி அணை திறக்கப்படுவதால், செருதோனி ஆற்றில் வெள்ளம் பாயும் என்பதால், தரைப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவது குறித்தும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய இடுக்கி மாவட்ட நிர்வாகம்மூலம் விரைவாகச் செய்ய விவாதிக்கப்பட்டது.