2.0 படத்திற்கு வந்துள்ள புதிய பிரச்சனை! தணிக்கை குழுவிடம் புகார் அளித்துள்ள செல்போன் ஆபரேட்டர்கள்
cellphone operators against 2.0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த படங்களில் அதிக முதலீடு செய்து எடுக்கப்பட்ட படம் தான் 2.0. இந்த படத்தின் முதல் பாகம் தான் கடந்த 2010-ம் வருடம் ரஜினி - சங்கர் கூட்டணியில் உருவாகிய எந்திரன் படம். இந்த படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்று மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனை தொடர்ந்து இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் எந்திரன் 2.0. இந்த படம் எந்திரனின் 2 ம் பாகமாகவே கருதப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லன் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமாரும் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை நவம்பர் 29ம் தேதி நாளை வெளியிடுவதற்காக டிக்கெட் விற்பனைகளும் தொடங்கிவிட்டன.
டீசரின் மற்றும் ட்ரைலரில், காரில் செல்போனில் ஒருவர் பேசிக்கொண்டு செல்லும்போது, அந்த போன் தானாக காற்றில் பறந்து செல்கிறது. அதனை தொடர்ந்து அனைவரின் செல்போன்களும் காற்றில் பறக்கின்றன. இதன் மூலம் இந்த படம் செல்போன்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மேலும் பறந்து செல்லும் செல்போன்கள் ஒன்றாக சேர்ந்து கழுகு போன்ற உருவம் உருவாகிறது. இந்த உருவம் நகரத்தில் பல்வேறு சேதாரங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், செல்போன்களைத் தவறாக சித்திரித்துள்ளதாகக் கூறி 2.O படத்தை மறுதணிக்கை செய்யக்கோரி செல்போன் ஆபரேட்டர்கள் மத்திய தணிக்கைத்துறையிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எவ்வித ஆதாரமும் இன்றி 2.0 திரைப்பட டீசர் டிரெய்லரில் செல்போன்களைத் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது என்று கூறி மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு இந்திய செல்போன் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் புகார் மனு அனுப்பியுள்ளனர். நாளை மறுநாள் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.