நிலைதடுமாறிய ஆடி கார்; கோவையில் 6 பேர் பரிதாப நிலையில் உயிரிழந்த துயர சம்பவம்
கோவையில் இருந்து சுந்தராபுரம் நோக்கி சென்ற ஆடி சொகுசு கார் நிலை தடுமாறி பேருந்து நிறுத்தத்தில் பயங்கரமாக மோதியதில், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், பூ விற்ற பெண் உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரம் பகுதியில், பேருந்துக்காக சாலையோரம் மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது, கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்த ஆடி கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது மோதியது. அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 4 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
காரை ஓட்டிவந்தவர் மதுபோதையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
சம்பவம் பற்றி தெரியவந்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய கார், ரத்தினம் கல்லூரியின் சேர்மேன் மதன் செந்திலுக்குச் சொந்தமான கார் என்றும் காரை ஓட்டி வந்தவர் பெயர் ஜெகதீசன் என்றும் கூறப்படுகிறது. மதன் செந்திலின் கார் ஓட்டுநரான ஜெகதீசன், அவரை பிக் அப் செய்வதற்காக வந்த போது இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.